செந்தில் பாலாஜி புதிய மனு அமலாக்க துறைக்கு உத்தரவு
செந்தில் பாலாஜி புதிய மனு அமலாக்க துறைக்கு உத்தரவு
ADDED : ஏப் 30, 2024 11:13 PM
சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இந்த மனு மீதான உத்தரவு, நேற்று பிறப்பிக்கப்படும் என, தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நேற்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'வங்கி தரப்பில் அசல் ஆவணங்களை ஒப்படைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நகல் ஆவணங்களையே வங்கி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. அசல் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை, வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது' என்று கூறப்பட்டுள்ளது.
அதை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார். மேலும், செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 4க்கு தள்ளிவைத்தார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 36வது முறையாக, ஜூன் 4 வரை நீட்டித்துநீதிபதி உத்தரவிட்டார்.