நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம்: மத்திய அமைச்சர் முருகன் காட்டம்
நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம்: மத்திய அமைச்சர் முருகன் காட்டம்
ADDED : ஜூலை 01, 2024 05:03 PM

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் பிரிவினைவாத கும்பலின் செயல்பாடு அதிகரித்துள்ளது' என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் வெறுப்பு போர்வையில் பிரிவினைவாத பிரசாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவாரா?. தமிழகத்தில் திமுக கூட்டணியினர் செய்து வரும் நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை.
தேசவிரோத கருத்துகள்
சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பரப்பப்படுகின்றன. திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்குள்ளாக்கும் செயல்.
கிள்ளி எறியாவிட்டால் ஆபத்து
இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.