வீட்டு காவலில் கம்யூ., நிர்வாகி அரசை கண்டிக்கும் சண்முகம்
வீட்டு காவலில் கம்யூ., நிர்வாகி அரசை கண்டிக்கும் சண்முகம்
ADDED : மார் 02, 2025 06:27 AM
சென்னை: “எவ்வித வழக்குகளோ, பிரச்னைகளோ இல்லாத மாதர் சங்க மா.செ.,வான பாப்பாத்தியை வீட்டுக் காவலில் வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை காவல்துறை கைவிட, போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க, கல்வி நிலையங்களில் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த, பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்ட, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சென்னையில், இரு நாட்களுக்கு முன் பேரணி நடத்தியது.
மாதர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
போலீசாரின் அனுமதியுடன் நடைபெற்ற இப்பேரணிக்கு, மாநிலம் முழுதிலும் இருந்து பெண்கள் சென்னைக்கு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டச் செயலர் பாப்பாத்தியும் சென்னை பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்டார்.
அப்போது அவரை, திண்டுக்கல் மாவட்ட போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திண்டுக்கல் கம்யூ., - எம்.பி., சச்சிதானந்தம் தலையிட்ட பின்பும் கூட, பாப்பாத்தியை விடுவிக்க மறுத்து, போலீசார் தகராறு செய்துள்ளனர். இந்த மோசமான செயலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.