குடல் வற்றி இறந்துபோன கொக்கு பா.ஜ.,வை சீண்டும் சேகர்பாபு
குடல் வற்றி இறந்துபோன கொக்கு பா.ஜ.,வை சீண்டும் சேகர்பாபு
ADDED : மார் 09, 2025 01:17 AM
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி, ஓட்டேரியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்றபின், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
தமிழகத்தில் பா.ஜ., ஏற்கனவே விரட்டப்பட்ட இயக்கம். மதத்தால், இனத்தால் பிரிவினையை உண்டாக்க நினைத்தனர். அதற்கு தமிழக மண்ணில் இடமில்லை என்பதை அறிந்ததும் மாணவர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர்.
மக்களே வெகுண்டெழுந்து புலியை முறத்தால் அடித்து விரட்டிய நிலை, தமிழக பா.ஜ.,வுக்கு உருவாகும்.
ஆன்மிகத்திற்கு எதிரானது தி.மு.க., ஆட்சி என்றனர். ஆனால், 2,670 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஆன்மிகத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தியபோது, அது துருப்பிடித்து, முனை மழுங்கியது போல், கல்வித்துறைக்கு எதிராக பா.ஜ., எடுத்திருக்கும் ஆயுதமும் துருப்பிடிக்கும்.
இலவு காத்த கிளிபோல், கூட்டணிக்காக பா.ஜ., காத்திருக்க வேண்டியது தான். கடல் வற்றி கருவாடு தின்னலாம் எனக் காத்திருந்த கொக்கு, குடல் வற்றி இறந்து போகும் கதையாக தான் பா.ஜ.,வின் கனவு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.