மின் கட்டண 'வாட்ஸாப்' வசதியில் வேறுபாடு இருப்பதால் அதிர்ச்சி
மின் கட்டண 'வாட்ஸாப்' வசதியில் வேறுபாடு இருப்பதால் அதிர்ச்சி
UPDATED : மே 26, 2024 03:43 AM
ADDED : மே 25, 2024 08:41 PM

சென்னை:தமிழக மின் வாரியம், 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதியை, இம்மாதம் 16ல் துவக்கியது. அதன்படி, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில் இருந்து வாட்ஸாப்பில், 'வியூ தி பில்' மற்றும் 'பே தி பில்' என்று, 'லிங்க்' அனுப்பப்படுகிறது.
வியூ பில் லிங்க்கை கிளிக் செய்ததும், எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது, அதற்கான கட்டணம் ஆகிய விபரங்கள் அடங்கிய ரசீதை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'பே பில்' லிங்க்கை கிளிக் செய்ததும் பணம் செலுத்தக் கூடிய யு.பி.ஐ., பக்கத்திற்கு செல்கிறது.
கடந்த வாரத்தில் வாட்ஸாப்பில் கட்டண தகவல் அனுப்பப்பட்ட பலருக்கு, ரசீதில் ஒரு கட்டணமும், யு.பி.ஐ., பக்கத்தில் அதை விட, அதிக கட்டணமும் வந்துள்ளது. இரண்டில் எந்த கட்டணத்தை செலுத்துவது என தெரியாமல், குழப்பம் அடைந்துள்ள நுகர்வோர், அதிக கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாட்ஸாப்பில் மின் கட்டணம் செலுத்த அனுப்பிய தகவலில், ஒரே சமயத்தில் இரு கட்டணங்கள் எப்படி வந்தன என்பது குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார் வந்ததும், வெவ்வேறு கட்டணம் சென்ற நுகர்வோருக்கு, புதிய கட்டணம் அடங்கிய தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபோன்ற பிரச்னை இனி ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.