ADDED : ஏப் 02, 2024 08:58 PM
சென்னை:“தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்னையை கையில் எடுக்கவில்லை. மக்களுக்கு உண்மையை சொல்வதே பா.ஜ.,வின் நோக்கம்,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
இலங்கைக்கு, 1974ல் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு பற்றி, இப்போது தேர்தல் நேரத்தில் ஏன் பேச வேண்டும் என்று கேட்கின்றனர். தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்னையை பா.ஜ., எழுப்பவில்லை. கச்சத்தீவு என்பது, நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடையது.
இந்தியாவின் ஒரு பகுதியை, இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அதை தடுக்கவில்லை. கச்சத்தீவு இலங்கையிடம் சென்றதால் தான், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்றளவும் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர்.
இந்த உண்மைகளை மக்களிடம் சொல்கிறோம். கச்சத்தீவு குறித்து நேரு எழுதிய கடிதத்தில், 'அது ஒரு தொல்லை. சீக்கிரத்தில் கையைவிட்டுப் போனால் நிம்மதி' என்று கூறியிருக்கிறார். 'கச்சத்தீவு சிறிய கல்பாறை' என, இந்திரா கூறினார்.
21 கடிதங்கள்
தமிழகத்திற்கு விரோதமாக காங்கிரஸ் அரசு செய்ததை, தி.மு.க., அரசு எதிர்க்காமல் வேடிக்கை பார்த்தது. இந்த வரலாற்று உண்மைகள், தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைக்கிறோம்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என, மத்திய அரசுக்கு 21 முறை முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த, 50 ஆண்டுகளாக காங்கிரசும், தி.மு.க.,வும் கச்சத்தீவு குறித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றன. அதனால் தான் உண்மையை சொல்கிறோம்.
கடந்த, 2014ல் மத்தியில் காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணி ஆட்சி இருந்த போது, தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஐந்து பேரையும் 2016ல் பிரதமர் மோடி மீட்டார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வு காண, வெளியுறவு,- மீன்வளத் துறை அமைச்சர்கள் இடம் பெற்ற குழுவை, பிரதமர் மோடி அமைத்தார். இதற்கு முன், இப்படியொரு குழு அமைக்கப்பட்டதில்லை.
கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கின்றனர். அது தொடர்பான இரண்டு, 'ரிட்' மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளன. அவை விசாரணைக்கு வரும் போது அதுபற்றி பேசுவோம்.
கடந்த, 1967க்கு பின், தமிழகத்தில் காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அவர்களின் ஓட்டு வங்கி, 4 சதவீதமாக குறைந்து விட்டது. மாநில கட்சிகளின் துணையோடு செயல்படுகின்றனர். கச்சத்தீவை ஏன் தாரை வார்த்தோம் என்பதற்கு தி.மு.க.,வும், காங்கிரசும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
போட்டியிடுவேன்
பா.ஜ., சார்பில் யார் போட்டியிட வேண்டும் என்பதை, கட்சித் தலைமை தான் முடிவு செய்கிறது. என்னை எப்போது போட்டியிட சொல்கின்றனரோ, அப்போது போட்டியிடுவேன். பணம் இருப்பவர்கள், பணம் இல்லாதவர்கள் அனைவருக்குமே, பா.ஜ.,வில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, பா.ஜ.,வுக்கு மட்டும் நிதி வரவில்லை. தேர்தல் பத்திரங்களில் தி.மு.க., பெற்ற மொத்த நிதியில், 90 சதவீதத்தை ஒரு நிறுவனத்திடம் இருந்து மட்டும் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்திற்கு தி.மு.க., என்ன சகாயம் செய்தது என்பது தெரியவில்லை.
வருமான வரித்துறையிடம் கணக்கு விபரங்களை, காங்கிரஸ் கட்சி சமர்ப்பிக்கவில்லை. அதனால் தான் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இது கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காத அனைவருக்கும் பின்பற்றப்படும் நடைமுறை தான். இதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஒன்பது, 'சம்மன்' அனுப்பியும் அமலாக்கத் துறை விசாரணைக்கு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் தான் குஜராத் முதல்வராக இருந்த மோடியை, சி.பி.ஐ., விசாரணைக்கு அழைத்தது. அவர் சி.பி.ஐ., முன் ஆஜராகி, 8 மணி நேரம் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.5,000 கோடி என்னாச்சு?
தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி கொடுக்கவில்லை என, திரும்ப திரும்ப பொய் பிரசாரம் செய்கின்றனர். தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக, 900 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. மழைக்காலம் துவங்கும் முன்பே, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியது.
அதில், 90 சதவீதத்தை செலவழித்து விட்டதாக, தி.மு.க., அமைச்சர் கூறினார். 5,000 கோடி ரூபாயை முறையாக பயன்படுத்தி இருந்தால், வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். இந்த உண்மைகளை மறைத்து, 1 பைசா கூட நிவாரணம் வழங்கவில்லை என்று பொய் பேசுகின்றனர்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர்

