'பாவம், புண்ணியம் கருத்தில் நம்பிக்கை' நீதிபதி உருக்கமான கடிதம்
'பாவம், புண்ணியம் கருத்தில் நம்பிக்கை' நீதிபதி உருக்கமான கடிதம்
ADDED : ஜூன் 30, 2024 01:22 AM

மதுரை: 'புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட சிறந்த வழக்கறிஞராக இருப்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். பாவம், புண்ணியம் என்ற கருத்தை நம்புகிறேன்.
'உங்களால் நான் தவறாக வழிநடத்தப்பட்டால், நான் தவறான தீர்ப்பை வழங்கினால், என் பாவத்தின் எண்ணிக்கை உயரும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதம்:
நான் நீதிபதியாக பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இக்காலம் முழுதும் மதுரை கிளையில் பணியாற்றுவது என் அதிர்ஷ்டம். முன்னாள் நீதிபதி கே.சந்துரு, 95,607 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். அவர் ஆறு ஆண்டுகள் எட்டு மாதங்கள் பணியாற்றினார். நான், 1 லட்சத்து 3,685 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளேன்.
மீதமுள்ள ஆறு ஆண்டுகளை நான் எப்படி செலவிடப் போகிறேன் என்பதில் எனக்கு சில கனவுகள் உள்ளன.
நிச்சயமாக, எதுவும் நம் கையில் இல்லை. எங்களில் ஒருவரான நீதிபதி பி.டி.ஆதிகேசவலு உடல்நலக் குறைவால் சிகிச்சையில் உள்ளார்.
அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலையை அறிந்திருந்தாலும், நாம் இன்னும் திட்டமிடுகிறோம். அதற்கு நான் விதிவிலக்காக இருக்க முடியாது.
ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு வழக்கறிஞரையும் சந்தேகத்துடன் பார்க்க நான் விரும்பவில்லை. அது என் குணத்தை சிதைத்துவிடுமோ என கருதுகிறேன். வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு முன் முழுமையாக சரிபார்க்க வேண்டும்.
ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் என்னை ஏமாற்றினால், எனக்கு நெருக்கமான சில நீதிபதிகளிடம் கருத்துக் கூறவோ அல்லது புகார் செய்யவோ கடமைப்பட்டிருக்கிறேன். நான் தவறான தீர்ப்பை வழங்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.
புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட, சிறந்த வழக்கறிஞராக இருப்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். பாவம், புண்ணியம் என்ற கருத்தை நான் நம்புகிறேன்.
உங்களால் நான் தவறாக வழிநடத்தப்பட்டால், நான் தவறான தீர்ப்பை வழங்கினால், என் பாவத்தின் எண்ணிக்கை உயரும்.
நீதிபதியின் கோபம் தற்காலிகமானது மட்டுமே. அது வழக்கின் முடிவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கணவன் - மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டாலும் அது விவாகரத்திற்கு வழிவகுக்காது. என் நீதிமன்றத்தில், ஒரு இளம் வழக்கறிஞரிடம் மிக கடுமையாக நடந்து கொண்டேன்.
இது என் சொந்த நிலைப்பாட்டின்படி இருந்தது. நான் அவரை அழைத்து எனது தனி அறையில் வைத்து வருத்தம் தெரிவித்தேன்.
அவர் சிரித்துவிட்டு, 'தயவுசெய்து என்னை மேலும் திட்டுங்கள்; ஏனெனில் நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல உத்தரவை வழங்குவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்' என்றார்.
நண்பர்களே, உங்கள் வாழ்த்துகளுடன், என் எட்டாவது ஆண்டு பணியில் நுழைகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.