ADDED : செப் 18, 2024 05:15 AM

சென்னை : ''திருமாவளவன், 'மது ஒழிப்பு மாநாடு நடத்துவோம், ஆட்சியில் பங்கு கேட்போம்' என்று, சிறுத்தையாக ஆரம்பித்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்ததும், சிறுத்துப்போய் விட்டார்,'' என, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ.,வினர், நேற்று மாநிலம் முழுதும் ரத்ததான தான முகாம், மருத்துவ முகாம், அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சென்னை தி.நகர், கமலாலயத்தில் உள்ள கட்சியினருக்கு, மூத்த நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டபின், தமிழிசை அளித்த பேட்டி:
திருமாவளவன், 'மது ஒழிப்பு மாநாடு நடத்துவோம், ஆட்சியில் பங்கு கேட்போம்' என்று, சிறுத்தையாக ஆரம்பித்து விட்டு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்ததும், சிறுத்துப் போய் விட்டார். தி.மு.க.,வினரை மேடையில் வைத்துக் கொண்டு, மது விலக்கு மாநாட்டை எப்படி நடத்த முடியும். மாநாட்டிற்கு, மதுபான அதிபர்கள் தான் நன்கொடையாளர்கள்.
நடிகர் விஜய் கட்சி துவங்கும் முன், திராவிட சாயலில் பயணிப்பது தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சி தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில் தான் வர வேண்டும். விஜய் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது, போகப் போகத்தான் தெரியும்.
தமிழகத்தில் எதிர்மறை அரசியலை நிலைநிறுத்தியது தி.மு.க., தான். பா.ஜ., நேர்மறை அரசியலை செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

