ADDED : மே 30, 2024 04:16 AM

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளா மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளில் இன்று(மே 30) துவங்க உள்ளது. அதேநேரத்தில், தமிழக வடமாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தென்மாவட்டங்களில் கோடை வெயில் குறைந்து, தென்மேற்கு பருவமழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாவட்டங்களில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில், 16 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.
சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், திருத்தணி, பரங்கிப்பேட்டை, 40; வேலுார், ஈரோடு, மதுரை, புதுச்சேரி, 39; துாத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சி, நாகை, கடலுார், கரூர் பரமத்தி, காரைக்காலில், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, சின்னக்கல்லாரில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, சோலையார், 4; சிற்றாறு, பெருஞ்சாணி 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மாவட்டங்களின் மேல், வளிமண்ட கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று துவங்க உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். நாளை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மாவட்ட கடலோரப் பகுதிகள், வங்கக் கடலின் தென்மேற்கின் தெற்குப் பகுதிகள், கேரளாவின் தெற்கு கடலோரப் பகுதிகள் ஆகியவற்றில் நாளை வரையிலும் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.