ADDED : மே 28, 2024 05:03 AM

சென்னை : 'திருநெல்வேலி மாவட்டத்தில், நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என, முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில், பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து, அறுவடை முடிந்து விட்டது. சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், தொடர்மழை காரணமாக, நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி முழுதும் முளைத்து விட்டன. இதனால், நெற்பயிர்களும், வைக்கோலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ராதாபுரம் சட்டசபை தொகுதியில், கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கி, முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
பணகுடிக்கு அருகில் உள்ள, புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் முளைத்து முற்றிலும் சேதமடைந்து உள்ளன.
எனவே, மாவட்டம் முழுதும் நெல் மணிகள் சேதத்தை ஆய்வு செய்து, இதை பேரிடராகக் கருதி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும், உடனடியாக முழுமையாக நிவாரணம் கிடைத்திட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.