ஈட்டிய விடுப்பு தொகை 'கட்' சிறப்பு எஸ்.ஐ.,க்கள் புலம்பல்
ஈட்டிய விடுப்பு தொகை 'கட்' சிறப்பு எஸ்.ஐ.,க்கள் புலம்பல்
ADDED : ஜூன் 20, 2024 01:55 AM
சென்னை:காவல் துறையில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பணிபுரியும், 13,000 பேருக்கு ஈட்டிய விடுப்பு தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, 1997ம் ஆண்டு, இரண்டாம் நிலை காவலர்களாக, 10,000 பேர்; 1999ல் 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் தற்போது, சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில், அவர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கான தொகை வழங்கப்பட்டது.
ஆனால், தலைமை காவலர்கள் என்ற நிலையில் தான் தரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சிறப்பு எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது:
எவ்வித தண்டனையும் பெறாமல், 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்ததால், எங்களுக்கு சிறப்பு எஸ்.ஐ., என, பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
ஆனால், தலைமை காவலர்கள் என்ற நிலையில்தான் வைக்கப்பட்டு உள்ளோம். ஞாயிறு பணிபுரிந்தால் எங்களுக்கு ஈட்டிய விடுப்பு தொகை, 500 ரூபாய் தருவர். அதையும் நிறுத்திவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீஸ் அங்காடியில், போலீசாருக்கு அடக்க விலையில், 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள், எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் என, அவர்களின் பதவிகளுக்கு ஏற்ப, பொருட்கள் வாங்கும் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு, அடையாள அட்டை கட்டாயம்.
போலீசாருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அடையாள அட்டைகளை புதுப்பித்து தர வேண்டும். அடையாள அட்டை புதுப்பித்து தராததால், அதில் பழைய பதவிகளின் பெயர்கள்தான் உள்ளன.
'போலீஸ் கேன்டீனில் பதவிகளுக்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட தொகைக்கு பொருட்கள் வாங்க முடியவில்லை; மாநிலம் முழுதும் அடையாள அட்டை குளறுபடி நீடிக்கிறது' என கூறுகின்றனர்.