அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஸ்டாலின் - ராகுல் உரையாடல்
அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஸ்டாலின் - ராகுல் உரையாடல்
ADDED : செப் 05, 2024 01:54 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் இடையிலான சமூக வலைதள உரையாடல், சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றதை போலவே, அரசியல் முக்கியத்துவமும் பெற்றுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின், அங்கு சிகாகோ நகரில் சைக்கிளில் பயணித்த வீடியோவை, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதை பகிர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'சகோதரரே, நாம் எப்போது சென்னையில் ஒன்றாக இப்படி சைக்கிள் பயணம் செய்யப் போகிறோம்' எனக் கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர், 'தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும், அப்போது நாம் ஒன்றாக சென்னையில் பயணிப்போம். நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புவழங்க வேண்டியுள்ளது.
'எனவே, சைக்கிள் பயணம் முடிந்ததும், என் இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென் மாநில உணவை உண்டு மகிழ்ந்திடுவோம்' என, கூறியுள்ளார்.
இருவரது உரையாடல், வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதேபோல், அரசியல் ரீதியாகவும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதற்கு காரணம், விஜய் கட்சி மாநாடும், அதில் ராகுல் கலந்துகொள்ள இருப்பதாகவும் வெளியான தகவலும். திட்டமிட்டே இப்படியொரு தகவலை, தமிழக காங்கிரசை சேர்ந்த தி.மு.க., எதிர்ப்பு கோஷ்டி பரப்பியதாக தெரியவந்துள்ளது.
அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஸ்டாலின் - ராகுல் உரையாடல் அமைந்திருப்பதாக, ஆளும் தி.மு.க., வட்டாரத்தில் சந்தோஷமாக சொல்லப்படுகிறது.