'மா மதுரை' போல மாநிலம் முழுதும் பண்பாட்டு விழாக்கள்: முதல்வர் விருப்பம்
'மா மதுரை' போல மாநிலம் முழுதும் பண்பாட்டு விழாக்கள்: முதல்வர் விருப்பம்
ADDED : ஆக 09, 2024 01:19 AM

சென்னை:''ஜாதி, மத வேறுபாடுகளுக்கு இடம் அளிக்காமல், பண்பாட்டு விழாக்களை எல்லாரும் கொண்டாட வேண்டும். 'மா மதுரை விழா' போன்ற விழாக்கள், மாநிலம் முழுதும் நடக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரை நகரின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும், 'மா மதுரை விழா' நேற்று துவங்கியது; நாளை மறுதினம் வரை நடக்க உள்ளது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக இவ்விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:
மதுரை மாநகர் பல்வேறு வரலாற்று பெருமைகளைக் கொண்டது. இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. தவறு செய்தவன் மன்னனே ஆனாலும், கண்ணகி கேள்வி கேட்ட மண்.
நீதியைக் காக்க தன் உயிரை தந்த மன்னர் ஆட்சி செய்த இடம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இருக்கும் கோவில் நகரம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்தகைய மதுரையை, மதுரைக்காரர்கள் மட்டுமல்ல; எல்லாரும் போற்றலாம். மதுரையை போற்றுவோம் என்று கொண்டாடலாம். கடந்த 2013 முதல், 'மா மதுரை போற்றுவோம்' விழா நடக்கிறது. எம்.பி., வெங்கடேசன் முயற்சியால், இது துவக்கப்பட்டது.
இவ்விழா நடக்கும் நாட்களில், மதுரை மாநகர் புத்துயிர் பெறுகிறது. கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம், வாண வேடிக்கை நடத்தப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட, 'இந்திர விழா' போல நடத்தப்படுகிறது. ஊரை பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரம் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தித் தர வேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும்.
பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டு திருவிழாவாக இதை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும், பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்காலத் தலைமுறை வளர வேண்டும்.
இதுபோன்ற விழாக்கள், கூட்டுறவு எண்ணத்தையும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கும். ஜாதி, மத வேறுபாடுகளுக்கு இடம் அளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை, எல்லாரும் கொண்டாட வேண்டும்; மாநிலம் முழுதும் இதுபோன்ற விழாக்கள் நடக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.