சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிலை: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிலை: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:28 AM

சென்னை: ''சுதந்திர போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுக்கு, தலா 50 லட்சம் ரூபாயில், திருஉருவச் சிலைகள் அமைக்கப்படும். அப்துல்கலாம் பிறந்த நாள், சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்,'' என, அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.
சட்டசபையில் செய்தித்துறை தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை காந்தி மண்டப வளாகத்தில், வீரமங்கை ராணி வேலுநாச்சியார் உருவச்சிலை; சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு, தலா 50 லட்சம் ரூபாயில் உருவச்சிலை நிறுவப்படும்
தமிழகத்தில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி, தமிழுக்கு பெருமை சேர்த்த, ஜெர்மன் நாட்டை சேர்ந்த சீகன் பால்குவுக்கு, சிலையுடன் கூடிய மணிமண்டபம்; சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய, தொல்லியல் துறை தலைமை இயக்குனராக பணிபுரிந்த, சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு, 50 லட்சம் ரூபாயில் உருவச்சிலை நிறுவப்படும்
கோவையில் அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு; சென்னையில் இந்திரா காந்தி; திருத்தணியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்; தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தியாகி நாடிமுத்துப்பிள்ளை; கரூரில் விவசாயிகள் நலனுக்கு பாடுபட்ட முத்துசாமி ஆகியோருக்கு, தலா 50 லட்சம் ரூபாயில் உருவச்சிலை அமைக்கப்படும்
செங்கல்பட்டில் ஜூலை 7 இரட்டைமலை சீனிவாசன்; கடலுார் மாவட்டத்தில் ஜூன் 1 சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாள், ஆண்டுதோறும் அந்த மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும்
மதுரை மாவட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்த, 16 வீரத்தியாகிகளுக்கு ஏப்., 3ல் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும்
ராமநாதபுரம் மாவட்டத்தில், அக்.,9ல் சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனார்; நாமக்கல்லில், தை 1ல், அல்லாள இளைய நாயக்கர்; வேலுாரில் ஏப்., 13ல், சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் தங்கோ; சென்னையில், செப்., 11ல் முன்னாள் முதல்வர் சுப்பராயன்; அக்.,15ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்; புதுக்கோட்டையில், ஜூலை 7ல் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்; திருச்சியில், மார்ச் 1 எம்.கே.தியாகராஜபாகவதர், ஜூன் 1ல், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்; ராணிப்பேட்டையில், ஏப்.,25 தமிழறிஞர் மு.வரதராசனார்; துாத்துக்குடியில், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோர் பிறந்த நாள், அந்த மாவட்டத்தில், அரசு விழாவாக கொண்டாடப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில், சென்னை அரசு மைய அச்சகத்திற்கு, 9 கோடி ரூபாயில் புதிய இயந்திரம் கொள்முதல் செய்வது உட்பட, பல்வேறு அறிவிப்புகளை, அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.