ADDED : செப் 09, 2024 06:28 AM

சென்னை :
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில், நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அங்குள்ள பணிகளுக்கு கனிம வளங்கள் தேவை எனக் கூறி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைகளையும், குன்றுகளையும் தகர்க்கும் பணிகள் துவங்கி உள்ளன.
அவ்வாறு தகர்த்தெடுக்கப்படும் கனிம வளங்களும், கேரளத்திற்குத்தான் கடத்தப்படுகின்றன என்பது வேதனையான உண்மை.
திருவட்டாறு கல்லுப்பாலம் பகுதியில்தான், மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமவள கொள்ளை மிக அதிகமாக நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன.
கல்லுப்பாலம் பகுதியிலும், அதே அளவில் கனிமவள கொள்ளையை நடத்த, கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
கனிமவளம் சுரண்டப்படுவதால், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நடந்தது போன்ற நிலச்சரிவு, கன்னியாகுமரி மாவட்டத்திலும் நடக்கலாம். அவ்வாறு நடந்தால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படலாம் என்று, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பாதுகாக்கும் வகையில், அங்கு நடக்கும் கனிமவள கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.