ரயில் பெட்டியில் அடுப்பு பறிமுதல்தனியார் சுற்றுலா மேலாளர் கைது
ரயில் பெட்டியில் அடுப்பு பறிமுதல்தனியார் சுற்றுலா மேலாளர் கைது
ADDED : மே 30, 2024 08:28 PM

மதுரை:மதுரையில் கடந்த ஆண்டு ஆக., 26 அதிகாலை சுற்றுலா ரயில் பெட்டியில் சமையல் செய்த போது தீப்பற்றி 9 பயணியர் உயிரிழந்தனர். அந்த விபத்துக்கு பின் சுற்றுலா ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த மதுரை -- புனலுார் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலுக்கு பயன்படுத்த அடுப்புக்கரி, சமையல் அடுப்பு ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நள்ளிரவில் சோதனை நடத்திய திருநெல்வேலி வர்த்தக பிரிவு இன்ஸ்பெக்டர் அரவிந்த், சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார். இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ராஜஸ்தானை சேர்ந்த தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்த், 64, கைது செய்யப்பட்டார். வடக்கு ரயில்வேயிலிருந்து வந்த இந்த சுற்றுலா ரயில் பெட்டியில் 59 பயணியர் வந்துள்ளனர்.
ரயில்வே அதிகாரி கூறியதாவது:
சுற்றுலா ரயில் பெட்டிகளை பதிவு செய்யும் போதே, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சொல்ல மாட்டோம் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழி வாங்கப்படுகிறது. இதையும் மீறி அபாயத்தை உணராமல் சுற்றுலா பயணியரை கவர இது மாதிரியான சட்ட விரோத செயல்களில் சுற்றுலா நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
சக பயணியர் யாராவது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருந்தால், அது பற்றிய தகவல்களை ரயிலில் பயணம் செய்யும் பயணியர், உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க்கு தெரிவிக்க வேண்டும். தீ விபத்துக்களை தவிர்க்க ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணியர் ரயில்களில் ஏற்றப்படும் சரக்குகளும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டே அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.