சரவெடி தயாரிக்கும் ஆலைகள் மீது நடவடிக்கையை கண்டித்து ஸ்டிரைக் டாப்மா சங்கம் அறிவிப்பு
சரவெடி தயாரிக்கும் ஆலைகள் மீது நடவடிக்கையை கண்டித்து ஸ்டிரைக் டாப்மா சங்கம் அறிவிப்பு
ADDED : மே 24, 2024 12:12 AM
சிவகாசி : வெம்பக்கோட்டை பகுதியில் சரவெடி உற்பத்தி செய்யும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்(டாப்மா) சார்பில் இன்று (மே 24) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது.
அதில் கடந்த 8 மாதங்களாக கிடப்பில் உள்ள பட்டாசு ஆலைகள் மீதான தடையை நீக்க கோரும் மனுக்கள், உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமத்திற்கு விண்ணப்பித்தல் ஆகிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டது.
பேரியம் நைட்ரேட் என்ற பச்சை உப்பு பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்யவும், ஜாயின்ட் கிராக்கர்ஸ் எனும் தொடர் பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்யும் போது பேன்சி ரக தொடர் ஷாட் பட்டாசுகளில் பச்சை உப்பு பயன்படுத்துவதை கண்டு கொள்ளாமல், தொடர் பட்டாசுகளில் ஒன்றான சரவெடி உற்பத்தி செய்யும் சிறிய பட்டாசு ஆலைகளை குறிவைத்து நடவடிக்கை எடுத்து மூடி வருகிறது.
எனவே இதனை கண்டித்து இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை, பட்டாசு ஆலைகள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சங்க தலைவர் கணேசன் கூறுகையில் ''வெம்பக்கோட்டை பகுதியில் 250க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடுத்தடுத்து அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனை கண்டித்து இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.