கல்லுாரி விடுதியில் சாப்பிட்ட மாணவியர் வாந்தி, மயக்கம்
கல்லுாரி விடுதியில் சாப்பிட்ட மாணவியர் வாந்தி, மயக்கம்
ADDED : மே 28, 2024 01:14 AM
வாழப்பாடி : சேலத்தில் உள்ள சேலம் பாலிகிளினிக் டாக்டர் கே.என்.ராவ் மருத்துவமனையின் ஒரு அங்கமாக, சேலம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில், எஸ்.பி.சி., செவிலியர் கல்லுாரி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவியர், 150 பேர் கல்லுாரி விடுதியில் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் மதியம், விடுதி மாணவியர் கேன்டீனில் உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை, சேலம் கே.என்.ராவ் மருத்துவமனைக்கு அழைத்து வந்து, முதலுதவி சிகிச்சை அளித்து, மீண்டும் கல்லுாரிக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் மாணவியருக்கு உடல்நிலை சீராகவில்லை. பாதிப்பு அதிகரித்தது. ஆனால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், கல்லுாரியில் ஒரு அறையில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
கடும் பாதிப்புக்குள்ளான மாணவியரை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை காலதாமதமாக அறிந்த மாணவியரின் பெற்றோர், கல்லுாரிக்கு படையெடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.