போலி என்.சி.சி., முகாம் நடந்த பள்ளிக்கு தனி அதிகாரி நியமிக்க அரசுக்கு பரிந்துரை
போலி என்.சி.சி., முகாம் நடந்த பள்ளிக்கு தனி அதிகாரி நியமிக்க அரசுக்கு பரிந்துரை
ADDED : செப் 06, 2024 02:29 AM
சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலி என்.சி.சி., முகாம் நடந்த தனியார் பள்ளியை நிர்வகிக்க, தனி அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி., முகாமில் பங்கேற்ற மாணவியருக்கு, என்.சி.சி., பயிற்றுனரான காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து, பள்ளி முதல்வர் சதீஷ்குமார், சிவராமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி போலியாக என்.சி.சி., முகாம் நடத்தியது, விசாரணையில் தெரிய வந்தது. வழக்கை விசாரிக்க சிறப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டிருந்த சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை, அரசு தாக்கல் செய்ய முதல் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி கோபாலப்பா தாக்கல் செய்த அறிக்கை:
தனியார் பள்ளி அளித்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை; முரணாக உள்ளது. தவறான நிர்வாகத்தால், சட்டவிரோத செயலை தடுக்க பள்ளி நிர்வாகம் தவறி விட்டது. அதனால், மாணவியர் பலரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்த சம்பவம் சட்டவிரோதமானது.
எனவே, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பள்ளியை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், 'பாதிக்கப்பட்ட மாணவியர், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. போக்சோ குற்றம் குறித்த புகார்களை எப்படி வழங்குவது, ஆசிரியர்கள் அவற்றை எப்படி கையாள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
'மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவியரின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது' என கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணையை, வரும் 12ம் தேதிக்கு முதல் அமர்வு தள்ளி வைத்தது.