ADDED : ஏப் 25, 2024 10:39 PM
தமிழகத்தில் நெல், கரும்பு, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
நெல் பயிர்களை சாகுபடி செய்வதற்கு அதிகளவில் நீர் தேவை. இதற்காக, ஆறு, ஏரி பாசனம் மட்டுமின்றி, நிலத்தடி நீராதாரங்களையும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடிக்கு நீர் தேவை குறைவு. எனவே, நெல்லுக்கு மாற்று பயிர்களை சாகுபடி செய்வதை அதிகரிக்க, வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
வறட்சியால் பல மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. இதனால், நெல் உள்ளிட்ட நீர் தேவையுள்ள பயிர்கள் சாகுபடியில் ஈடுபட வேண்டாம் என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எள் சாகுபடிக்கு சிறப்பு திட்டத்தையும் வேளாண் துறை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சாகுபடிக்கு தேவையான, விதைகள், உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளிட்டவை, மானிய விலையில் வழங்கப்படுகின்றன. நிலத்தடி பாசன வசதியுள்ள விவசாயிகள், மற்ற எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் சாகுபடியில் ஈடுபடவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

