ஜாபர் சாதிக் கூட்டாளி இயக்குனர் அமீருக்கு 'சம்மன்'
ஜாபர் சாதிக் கூட்டாளி இயக்குனர் அமீருக்கு 'சம்மன்'
ADDED : ஏப் 01, 2024 02:02 AM

சென்னை: சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட மூவருக்கு, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, மார்ச் 9ல், டில்லியில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், 'ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 45 முறை போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தேன்.
அந்த பணத்தில், கயல் ஆனந்தி நடிப்பில், 'மங்கை என்ற படத்தை தயாரித்தேன். அமீர் இயக்கத்தில், 'இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை தயாரித்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.
அப்போது, இயக்குனர் அமீருக்கும், தனக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விவரித்துள்ளார். இதனால், அமீர் எப்போது வேண்டுமென்றாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், போதை பொருள் கடத்தல் குறித்து ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோர் நாளை காலை 10:00 மணிக்கு, டில்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

