ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கு ஐகோர்ட் உத்தரவு சரியே: சுப்ரீம் கோர்ட்
ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கு ஐகோர்ட் உத்தரவு சரியே: சுப்ரீம் கோர்ட்
ADDED : மார் 01, 2025 12:24 AM

புதுடில்லி: கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில், 2006 - 2014 வரை விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிராக, ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அந்த நோட்டீசை ரத்து செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கு நேற்று, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஈஷா யோகா மையத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, இதிலுள்ள விதிமீறல்களை கண்டும் காணாமல் இருக்க முடியாது.
விதிமீறல் கட்டடங்கள் இருந்தால், அது, இயற்கை சூழலை பெரிய அளவில் பாதிக்கும். மேலும், இந்த விவகாரத்தில் கட்டடங்களை இடிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போவதில்லை. ஆனாலும், விதிமீறல்கள் இருக்கிறதா, இல்லையா என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் யாருக்கும் சலுகைகள் தரக்கூடாது' என, வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சட்டத்தின் பார்வையில், அனைவரும் சமம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே, விதிமீறல் இருந்தால், யாருக்கும் எந்த சலுகையும் வழங்கக்கூடாது என்பதில் நாங்களும் திட்டவட்டமாக இருக்கிறோம். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை புறந்தள்ளி விட முடியாது. எனவே, உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மனு முடித்து வைக்கப்படுகிறது.
ஈஷா யோகா மையம், எதிர்காலத்தில் எந்தவிதமான விதி மீறல்களிலும் ஈடுபடக்கூடாது. புதிதாக ஏதேனும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கான முன் அனுமதியை முறைப்படி பெற வேண்டும்.
தற்போது அமைந்துள்ள கட்டுமானங்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிக்கு அதிகமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என ஏதேனும் புகார்கள் வந்தால், சட்டத்திற்கு உட்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.