விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் கணக்கெடுப்பு
விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் கணக்கெடுப்பு
ADDED : ஆக 18, 2024 12:38 AM

சென்னை: இலவச மின் இணைப்பு பெற்று, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள இணைப்புகளின் விபரத்தை கணக்கெடுத்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயத்தை ஊக்குவிக்க இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, அரசு மானியமாக வழங்குகிறது.
தற்போது, 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு, 30,000 ரூபாய் செலவாகிறது. விவசாய இலவச மின்சாரத்தால், வேளாண் துறைக்கு ஆண்டுக்கு, 7,280 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.
சிலர், விவசாய இணைப்பு பெற்று விட்டு, அந்த மின்சாரத்தை விவசாயம் அல்லாத வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், விவசாய மின் இணைப்பு பெற்று, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள இணைப்புகள் மற்றும் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளை கணக்கெடுத்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு, வேளாண் துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணிகளை, மாவட்ட வாரியாக சென்று கண்காணிக்க, அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து பல நுாறு ஏக்கர் நிலங்களை வாங்கிஉள்ளன.
அவை அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை தங்கள் நிலங்களில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதுபோன்ற விபரங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவே, அரசு, கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.