விருதுநகர், செங்கோட்டை வழியாக தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில் முன்பதிவு துவக்கம்
விருதுநகர், செங்கோட்டை வழியாக தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில் முன்பதிவு துவக்கம்
ADDED : மே 11, 2024 10:29 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, விருதுநகர், செங்கோட்டை, புனலுார், கொல்லம் வழியாக முதல் முறையாக கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு வாரம் இருமுறை 'ஏசி' சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று முதல் துவங்கியது.
மே 16 முதல் ஜூன் 29 வரை தாம்பரத்தில் இருந்து (ரயில் எண் 6035) வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், செங்கோட்டை, புனலுார், கொல்லம் வழியாக மறுநாள் மதியம் 1:40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும் வகையிலும்,
மறு மார்க்கத்தில் மே 17 முதல் ஜூன் 30 வரை கொச்சுவேலியில் இருந்து (ரயில் எண் 6036) வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 3:35 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து மறுநாள் காலை 7:35 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
14 'ஏசி' பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளோ, முன்பதிவு இல்லாத பெட்டிகளோ கிடையாது. நேற்று காலை 8:00 மணி முதல் முன்பதிவு துவங்கியுள்ளது.
விருதுநகர் -செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் முதல் முறையாக இந்த ரயில் கொச்சுவேலிக்கு இயக்கப்படுவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக திருவனந்தபுரம் செல்லலாம்.
கட்டண விபரம்
தாம்பரத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை வரை எந்த ஊருக்கு பயணித்தாலும் ரூ. 990 கட்டணம். அதன்பின்பு விருதுநகர் ரூ.1040, சிவகாசி ரூ.1060, ஸ்ரீவில்லிபுத்தூர் ரூ.1075, ராஜபாளையம் ரூ. 1085, தென்காசி ரூ. 1160, புனலுார் ரூ.1220, கொல்லம் ரூ.1275, கொச்சுவேலிக்கு ரூ. 1335 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலுார் ஆகிய எந்த ஊரில் இருந்தும் கொச்சுவேலிக்கு ரூ.990 என ஒரே கட்டணமாகும்.