தமிழ் மொழி தி.மு.க.,வுக்கு மட்டும் சொந்தம் கிடையாது: வானதி
தமிழ் மொழி தி.மு.க.,வுக்கு மட்டும் சொந்தம் கிடையாது: வானதி
ADDED : ஏப் 16, 2024 04:23 AM
சென்னை : பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அளித்த பேட்டி:
வேலைவாய்ப்புக்காக, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கடந்த 10 ஆண்டு ஆட்சியில், 10 கோடி பெண்களுக்கு இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. உலகளவில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக, ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் மொழி, தி.மு.க.,வுக்கு மட்டுமே சொந்தம் மாதிரியும், தமிழைக் காப்பாற்ற, தங்களை தவிர வேறு யாரும் இல்லை என்றும் அக்கட்சி கருதுகிறது.
தமிழ் கலாசாரத்தை உலகறியச் செய்தவர் பிரதமர் மோடி. திருவள்ளுவரை தமிழகத்திற்குள் மாநில கட்சிகள் வைத்திருந்தன. திருவள்ளுவர் பெயரில், உலகம் முழுதும் கலாசார மையம் அமைக்க, பா.ஜ., தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு உலக அரங்கில் கொண்டு செல்லப்படும்.
கச்சத்தீவு விவகாரத்தில் மட்டுமின்றி, இந்திய மீனவர்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு தேவையானவை செயல்படுத்தப்படும். பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., பொய் என்று கூறுகிறது; ஆனால், ஒட்டுமொத்த தி.மு.க.,வே பொய் தான். அக்கட்சி பொய்யிலேயே பிறந்து, பொய்யிலேயே வளர்ந்தது.
காங்கிரஸ் முந்தைய இரு தேர்தல்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, மக்கள் ஏற்கவில்லை. அதேபோல், இந்த முறையும் காங்கிரசை மக்கள் நிராகரிப்பர். இவ்வாறு கூறினார்.

