ADDED : மே 30, 2024 07:25 AM

சென்னை : 'முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வரும், எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள் வாயிலாக, இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் உருவாகி வருகிறது' என, அரசு தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், பல சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்று விளையாட்டு துறையிலும், பல்வேறு நாடுகள் உற்றுநோக்கும் அளவிற்கு, தமிழகம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, விளையாட்டு துறையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அவரால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மூன்று ஆண்டுகளில், இத்துறைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னையில் உலக தரத்திற்கு இணையாக நேரு விளையாட்டு அரங்கம், உள்விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் போன்றவற்றில் நவீன வசதிகளும், புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது, 10 தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி விளையாட்டு மைதானங்கள், 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் உலக தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. பயிற்சி தரத்தை உயர்த்தும் வகையில், தடகளம், நீச்சல், டென்னிஸ், ஹாக்கி, ஸ்குவாஷ் விளையாட்டுகளுக்கு 81 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் வாயிலாக, சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள 2,738 விளையாட்டு வீரர்களுக்கு 89.6 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வரும், எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள் வாயிலாக தமிழகம், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உருவாகி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.