தமிழக காங்., நிர்வாகிகள் நீக்கமா புதியவர்களை நியமிக்க ராகுல் திட்டம்
தமிழக காங்., நிர்வாகிகள் நீக்கமா புதியவர்களை நியமிக்க ராகுல் திட்டம்
ADDED : மே 16, 2024 02:50 AM
தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களை கூண்டோடு நீக்கி விட்டு, புதிய நிர்வாகிகளை, காமராஜர் பிறந்த நாளுக்கு முன் நியமிக்க, டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழக காங்கிரசில் உள்ள 70 மாவட்ட தலைவர்களில், 20க்கும் மேற்பட்டவர்கள், 10 - 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளனர். 3 முதல் 5 ஆண்டு வரை மட்டுமே மாவட்ட தலைவர்கள் பதவியில் நீடிக்க வேண்டும். அதற்கு மேல் நீடிப்பவர்களை மாற்ற வேண்டும் என்ற புதிய விதியை, ராகுல் உருவாக்கி உள்ளார்.
நீண்ட காலமாக, மாவட்ட தலைவர்களாக இருப்பவர்களில் திறமையாக செயல்பட்டவர்களுக்கு மட்டும், மாநில நிர்வாகி பதவி வழங்க ராகுல் உத்தரவிட்டுள்ளார். இளங்கோவன், திருநாவுக்கரசர், அழகிரி மாநில தலைவர்களாக இருந்த போது நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களில் பலர், சரிவர செயல்படாமல் உள்ளனர்.
கட்சிக்கு உழைக்காதவர்களை மாற்றும் முடிவுக்கு, டில்லி தலைமை வந்துள்ளது. மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, யாரெல்லாம் சரிவர செயல்படவில்லை என கண்டறிய மாநில தலைமைக்கு டில்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு செல்வப்பெருந்தகை சென்று வந்துள்ளார். அடுத்தகட்டமாக, நாமக்கல், சேலம், கோவை செல்கிறார். தற்போது, மாநில துணைத் தலைவர்கள் 38 பேர், பொதுச்செயலர்கள் 50 பேர், செயலர்கள் 100 பேர் மற்றும் 22 அணி நிர்வாகிகள் என, 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
இவ்வளவு பெரிய பட்டியலை வெளியிட, அப்போதே சோனியாவிடம், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதையும் மீறி, இவ்வளவு பேர் நியமிக்கப்பட்டனர்; அவர்களில் பலர் செயல்படுவதே இல்லை. சீனியர், ஜூனியர் மற்றும் தகுதியுடைவர்கள், தகுதி இல்லாதவர்கள் என்ற வித்தியாசம் தெரியாமல் நியமிக்கப்பட்டதால், பதவிகளுக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டது.
எனவே, கட்சியின் இந்த கட்டமைப்பை அடியோடு மாற்ற வேண்டும் என்று, ராகுல் முடிவெடுத்திருக்கிறார். அதிகபட்சம் 150 பேருக்கு மேல் நிர்வாகிகள் இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி புதிய நிர்வாகிகளை நியமிக்க வசதியாக, தற்போதுள்ள, 400 பேரையும் கூண்டோடு நீக்க திட்டமிட்டுள்ளார்.அதன்பின், மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் பதவிக்கு தகுதியுடையவர்களை தேர்வு செய்து, ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில் நியமிக்க உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -