பிரதமரின் ரூ.6,000 உதவித்தொகை தமிழக விவசாயிகள் ஏமாற்றம்
பிரதமரின் ரூ.6,000 உதவித்தொகை தமிழக விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 05, 2024 10:47 PM
சென்னை:பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில் சேர்ப்பதற்கு, தமிழக வேளாண் துறை நடவடிக்கை எடுக்காததால், 10 லட்சம் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 1.47 கோடி ஏக்கர் வேளாண் நிலங்கள், 79.38 லட்சம் விவசாயிகள் வசமுள்ளன. மத்திய வேளாண் துறை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில், 93 சதவீத சிறு, குறு விவசாயிகளும், 7 சதவீதம் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் உள்ளனர்.
சிறு, குறு விவசாயிகளிடம், 62 சதவீத விவசாய நிலங்கள் உள்ளன. மொத்த வேளாண் நிலங்களில், 1.19 கோடி ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்து வருகிறது.
பயிர் சாகுபடியில் ஈடுபடும் சொந்த நிலங்களை வைத்துள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில், 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மூன்று தவணைகளாக, இத்திட்டத்தின் கீழ், தலா 2,000 ரூபாய் வீதம், விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில், 2020, 2021ம் ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 44 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டது. இதில், விவசாயிகள் அல்லாத பலர் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டது.
அதனால், பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது, 21.3 லட்சமாகக் குறைந்துள்ளது. இதுவரை தமிழக விவசாயிகளுக்கு, 16 தவணைகளில், 10,435 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, மேலும், 10 லட்சம் விவசாயிகள் வரை தகுதி உடையவர்களாக உள்ளனர்.
இதற்கென மத்திய அரசு உருவாக்கியுள்ள இணைய தளத்தில், உரிய விபரங்களை வேளாண் துறையினர் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்காமல், வேளாண் துறையினர் மெத்தனமாக உள்ளனர்.
எனவே, தகுதியிருந்தும், மத்திய அரசு வழங்கும் விவசாய உதவித்தொகையை பெற முடியாமல், 10 லட்சம் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.