மீனவர்களுக்கு உதவாத தமிழக மீன்வளத்துறை அமைச்சர்: பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு
மீனவர்களுக்கு உதவாத தமிழக மீன்வளத்துறை அமைச்சர்: பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 13, 2024 04:25 AM

மதுரை: நாட்டுப்படகு மீனவர்களுக்கு தமிழக மீன்வளத்துறையோ, அமைச்சரோ எந்த விதத்திலும் உதவவில்லை'' என மதுரை வந்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங்கிடம் மனு கொடுக்க வந்த தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்.
கோரிக்கை குறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி கூறியதாவது:
ஜூலை 1 ல் பாம்பன், தங்கச்சி மடம், நம்புதாளையில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப்படகுகள் தான் எங்களுக்கு பிரச்னையானவை; நாட்டுப்படகுகளை சிறைபிடிப்பதில்லை என்று சொன்ன இலங்கை கடற்படை நான்கு நாட்டுப்படகுகளை பிடித்துச் சென்றது. மீனவர்களை மீட்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
நான்கு மாதங்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரம் வந்த போது சிறைபிடித்துச் சென்ற 2 நாட்டுப்படகுகளை மீட்க கோரிக்கை வைத்தோம். உடனடியாக இலங்கை அதிகாரிகளிடம் பேசி 12 மணி நேரத்திற்குள் படகுகளை மீட்டுக் கொடுத்தார். அதேபோல தற்போது சிறைபிடித்துள்ள 25 மீனவர்களையும் படகுகளையும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் மீட்டுத்தரவேண்டும்.
நாட்டுப்படகு மீனவர்களை மீட்கக்கோரி 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தாலும் தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் தான் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டுமென தெரிவித்தும் தமிழக அரசோ மீன்வளத் துறையோ எந்த உதவியும் செய்யவில்லை. தமிழகத்தில் மீன்வளத்துறை இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. நேரடியாக மத்திய மீன்வளத்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் இருக்கவே மீனவர்கள் விரும்புகிறோம்.
உள்நாட்டிலும் கடற்கரை ஓரங்களிலும் 60 லட்சம் பாரம்பரிய மீனவர்கள் உள்ளோம். ஆனால் வணிக ரீதியான மீனவர்களுக்கே தமிழக அமைச்சர் முக்கியத்துவம் தருகிறார். படகுகளுக்கு டீசல் மானியம் அதிகரிப்பதாகவும் மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8000 தருவதாக வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை.
சமீபத்தில் மண்டபம் பகுதியில் மானிய விலையில் 11 படகுகள் அமைக்கப்பட்டன. அதில் 10 படகுகள் மீனவர்கள் அல்லாதவர்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.
50 சதவீத மானியம் வணிகரீதியான மீனவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மாற்றுமுறை மீன்பிடிப்பு தொழில்நுட்பங்களை கொண்டு வந்தாலும் அதில் 95 சதவீதம் வணிக ரீதியான மீனவர்கள் தான் பயன்படுத்துகின்றனர்.
ஆழ்கடலில் போகும் நாட்டுப்படகு தேவை என மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு கொண்டு வரும் எந்த பரிந்துரைக்கும் மாநில அரசு செவிசாய்ப்பதில்லை.
படகுகளை பதிவு செய்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களின் படகு உரிமையை ரத்துசெய்துவிட்டு வணிக ரீதியான நபர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.
பாக் ஜலச்சந்தி மீனவர்கள் இந்திய இலங்கைப் பிரச்னையை சந்திப்பதால் மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக ஆளுமையுள்ள வேறு அமைச்சரை தமிழகத்திற்கு நியமிக்க வேண்டும். 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு பிறகு தான் மீனவர் பிரச்னை அதிகமாகி விட்டது.
தேசிய அளவில் பா.ஜ., அரசு மீனவர் நலனுக்காக ரூ.36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. தமிழகத்திற்கு பாக் ஜலச்சந்தி மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற திட்டங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கியது. அதில் ரூ.50 கோடியைத் தான் தமிழக அரசு பயன்படுத்தியுள்ளது.
மீதித்தொகையை வேறு செலவுக்கு பயன்படுத்துகின்றனர். மத்திய அரசு தரும் நிதியை தமிழக மீன்வளத்துறை சூறையாடுகிறது. முதல்வர் ஸ்டாலினும் கண்டு கொள்வதில்லை என்றார்.