தமிழக மீனவர் நலன் பாதுகாக்கப்படும் * அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
தமிழக மீனவர் நலன் பாதுகாக்கப்படும் * அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
ADDED : ஆக 05, 2024 09:43 PM

சென்னை:''மீனவர்களின் நலன்களை பாதுகாக்க, மத்திய அரசு முனைப்புடன் உள்ளது; குறைகளுக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவ சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், டில்லியில் நேற்று, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, 'சர்வதேச ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படை படகு மோதியதால், ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார்; காணாமல் போனவரை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்; இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது; இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவாக மீட்டு தர வேண்டும்' என, மீனவர்கள் வலியுறுத்தினர்.
மீனவ பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
இலங்கை துாதரை வரவழைத்து, இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியில், இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூடு சம்பவம் முற்றிலுமாக தடுக்கப்பட்டது. மீனவர்கள் கைது செய்யப்பட்டால், சில மாதங்களில் உடனே மீட்கப்படுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, 10 ஆண்டுகளில் மொத்தம், 273 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், 204 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, தமிழகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
இலங்கை காவலில் உள்ள எஞ்சியுள்ள, 69 மீனவர்களில், 61 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். மீதம், 8 பேர் தண்டனை கைதிகளாக உள்ளனர். இதுதவிர, மூன்று விசைப்படகு உரிமையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் சுமூகமாக தீர்வு காணப்பட்டு, அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவர்.
சமீபத்தில் காணாமல் போன மீனவரையும் விரைந்து கண்டுபிடிக்க, இந்தியா, இலங்கை கடற்படை அதிகாரிகள் துணையுடன், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய அரசுக்கும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
*