ADDED : ஆக 08, 2024 01:25 AM
சென்னை:தேசிய கைத்தறி நாளையொட்டி, மாநில அளவில் 'திறன்மிகு நெசவாளர்' விருதுக்கு தேர்வான, 60 நெசவாளர்களுக்கு, தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
பத்தாவது தேசிய கைத்தறி நாள், சென்னை கோ - ஆப்டெக்ஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர், மாநில அளவில் திறன்மிகு நெசவாளர் விருதுக்கு தேர்வான, 60 பேருக்கு, 4 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
கடந்த ஆண்டு சிறந்த வேலைப்பாடு கொண்ட ரகங்களை திறம்பட நெசவு செய்த நெசவாளர்களில், 20 கைத்தறி ரகங்களில், ரகத்திற்கு தலா மூன்று பேர், முதல் மூன்று பரிசு பெற என,60 பேர் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.
மேலும், நெசவாளர்கள் 101 பேருக்கு, வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், முதியோர் ஓய்வூதியம், தறி உபகரணங்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். கைத்தறித் துறையின் மூன்றாண்டு சாதனை புத்தகம் வெளியிடப்பட்டது.
விழாவில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.