ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் பா.ஜ., - பா.ம.க., வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் பா.ஜ., - பா.ம.க., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2024 01:52 AM
சென்னை:ஜாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்: தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு உரிமையை, வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர். வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு, நீதிமன்றத்தால் தடை செய்யப்படவில்லை.
அ.தி.மு.க., அரசு தேர்தல் காலத்தில் அவசரமாக நிறைவேற்றியது. எந்த தரவு அடிப்படையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது என, நீதிமன்றம் கேட்டுள்ளது.
அந்த தரவுகளை தயாரித்து வழங்கி, இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இதற்காக தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன்: ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும்போது, அந்தந்த ஜாதி உட்பிரிவுகளை ஒற்றுமைப்படுத்தி, ஒரே ஜாதியாக கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு ஜாதிக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அந்த ஜாதி முழுதும் வளர்ந்து விட்டதாக அர்த்தம் இல்லை.
இட ஒதுக்கீட்டால் பயன் அடைந்தவர்களின் குழந்தைகளுக்கு உள்ள வாய்ப்பு, அதே ஜாதியில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களும் வளர வேண்டும். அதற்கும் தீர்வு காண வேண்டும்.
பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: ஜாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என, முதல்வர் கூறினார். மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம், ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.
மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பை, மாநில அரசு தான் நடத்த வேண்டும்.
பா.ம.க., - அருள்: தமிழக அரசுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முழு உரிமை உள்ளது. எனவே, அதை தட்டி கழிக்க கூடாது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
மத்திய அரசு நடத்த வேண்டும் என காலம் தாழ்த்துவது தவறு. ஊராட்சிகளே கூட ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தலாம். ஜாதி வாரி கணக்கெடுப்பை, தமிழக அரசே நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
முதல்வர் தீர்மானத்தை ஆதரித்து, ம.தி.மு.க., சின்னப்பா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சிந்தனைசெல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாகை மாலி, காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, பன்னீர்செல்வம் அணி மனோஜ் பாண்டியன் ஆகியோரும் பேசினர்.