'மதுபான கொள்கையை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்' உயர் நீதிமன்றம் அறிவுரை
'மதுபான கொள்கையை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்' உயர் நீதிமன்றம் அறிவுரை
ADDED : ஜூலை 04, 2024 02:35 AM
மதுரை:'வருங்காலத் துாண்களான இளைய தலைமுறையினரின் நலன் கருதி, மதுபானக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்' எனத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரை கூறியுள்ளது.
திருச்சி காட்டூர் சிங்காரம் நகர் பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு:
உறையூர் லிங்கம் நகர் மீன் மார்க்கெட் அருகே மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கூடம் துவக்கப்பட உள்ளது. மது அருந்துவோரால் மக்களுக்கு இடையூறு ஏற்படும்.
ஆட்சேபித்து மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், திருச்சி கலெக்டருக்கு மனு அனுப்பினோம். மனமகிழ் மன்றம் துவக்க உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வழிபாட்டுத் தலம், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 50 மீ., துாரத்திற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீ., துாரத்திற்குள்ளும் மது விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது என விதிகளில் உள்ளது.
மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் 50 மீ., துாரத்திற்குள் வழிபாட்டுத் தலம், கல்வி நிறுவனம் இல்லை; விதிமீறல் இல்லை. மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: மனுதாரரின் ஆட்சேபனையை விதிகள்படி கலெக்டர் நிராகரித்ததில் தவறில்லை. அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் உரிமம் வழங்கப்படலாம்.
அதேநேரம், ஒரு வழிபாட்டுத் தலம் அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து 51 மற்றும் 52வது மீட்டரில் டாஸ்மாக் கடை அமைந்தால், அதனால் மாணவர்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது அரசு நிர்வாகத்தின் முடிவு. டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் விதிமீறல் இல்லை என்கின்றனர்.
டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களை பாதுகாக்க இவ்விதி உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. மது விற்பனையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, தமிழக மக்கள் நீண்டகாலம் பாதிக்கப்பட வழிவகுக்கிறது.
அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுக் கருத்தின் அடிப்படையில், மது விற்பனை கொள்கையை மறு பரிசீலனை, ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. தற்போதைய மதுபானக் கொள்கையால் இளைய தலைமுறையினர் ஆபத்தில் சிக்குகின்றனர்.
அவர்கள் நலன் கருதி, மதுபானக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கிறது.
இக்கருத்துகள் பதிவு மற்றும் கோரிக்கை விடுப்பதைத் தவிர, இவ்வழக்கில் எவ்வித நிவாரணமும் அளிக்கும் நிலையில் இந்த நீதிமன்றம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.