ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்: அன்புமணி
ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்: அன்புமணி
ADDED : மார் 02, 2025 06:21 AM

சென்னை: தமிழக ஆழ்கடல் பகுதியில், 'ஹைட்ரோ கார்பன்' எடுக்கும் திட்டத்தை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்வில், பா.ம.க., வின் 18வது ஆண்டு வேளாண் நிழல் பட்ஜெட்டை, அவர் வெளியிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
வரும் நிதி ஆண்டுக்கான பா.ம.க., வேளாண் நிழல் பட்ஜெட், 85,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில், 20,000 கோடி ரூபாய் நீர்வளத் துறை சார்பில் செலவிடப்படும். அனைத்து விளை பொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க, சட்டம் கொண்டு வரப்படும்.
நெல்லுக்கு குவின்டாலுக்கு 3,500 ரூபாய், கரும்புக்கு டன்னுக்கு 5,000 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்படும். 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகள் உருவாக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை, நல்லெண்ணெய், கடலை, தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.
விலங்குகள் தாக்கி உயிரிழக்கும் விவசாயிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வேளாண் துறையில், 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வேளாண் திட்டங்களுக்கு நிதி திரட்ட சிறப்பு வரி விதிக்கப்படும்.
தமிழகத்தில் மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 150 நாட்கள் வேலை வழங்கப்படும், நிலப் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு எழுவதால், தமிழக ஆழ்கடல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏல அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால், மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
பூகம்பம் போன்ற ஆபத்துகளும் நிகழும் வாய்ப்புள்ளது. எனவே, இத்திட்டத்தை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.