ADDED : செப் 07, 2024 12:44 AM
சென்னை: தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதுடன், புதிய அரசாணைகள் வெளியிடப்படாதது, பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசிற்கு, tn.gov.in என்ற முகவரியில், அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளது. இதில், அரசின் அறிவிப்புகள், அரசாணைகள், செய்திக் குறிப்புகள் பதிவிடப்படுகின்றன.
கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலர் குறித்த விபரங்கள், தொடர்பு எண்கள், 'இ - மெயில்' முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அரசின் பல்வேறு துறைகளின் இணையதள இணைப்புகளுக்கு செல்லவும் வசதி உள்ளது.
இதை தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ், என்.ஐ.சி., எனப்படும், தேசிய தகவல் மையம் உருவாக்கி, இயக்கி வருகிறது. இந்த இணையதளத்தை, பிப்ரவரியில் மட்டும், 1.16 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர்.
பலகோடி செலவு
அரசின் தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும், 2022 மார்ச் 7ல், இ - அலுவலகமாக மாற்றப்பட்டன. இதற்காக, பல கோடி ரூபாயில், கம்ப்யூட்டர், பிரின்டர், இணையதளம், புரஜெக்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதற்காக, மே மாதம் வரை, 31.2 லட்சம் மின் கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்வாயிலாக காகித பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்கும் முயற்சி நடக்கிறது.
இவற்றை, அரசின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதன் வாயிலாக, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க முடியும். அரசு உத்தரவுகளின் உண்மைத் தன்மையையும் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால், இந்த இணைய தளம் உடனுக்குடன், 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளது. தமிழக அரசின் இணையதள பக்கத்தில், பல துறைகளுக்கு, 2021, 2022, 2023ம் ஆண்டுகளின் பதிவேற்ற அரசாணைகள் தான் உள்ளன; இந்த ஆண்டின் அரசாணைகள் பதிவேற்றப்படவில்லை.
தற்போது, தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 12,525 ஊராட்சிகள் உள்ளன. ஆனால், அரசின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,618 ஊராட்சிகள் இருப்பதாக தவறான தகவல் உள்ளது. இது, இணையதளத்தை பயன்படுத்தும் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றம்
இதுகுறித்து, தமிழக அரசின் இணையதள பார்வையாளர் ஒருவர் கூறியதாவது:
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதன்வாயிலாக, அங்குள்ள முதலீட்டாளர்களின் பார்வை, தமிழகத்தின் மீது விழக்கூடும்.
தமிழகத்தில் உள்ள சாதகமான சூழல்களை ஆராய்வதற்கு, அரசின் இணையதளத்தை அவர்கள் பார்வையிட்டால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.
அந்த அளவிற்கு பல தகவல்கள் பழையதாகவே உள்ளன. இந்த இணையதளத்தை நிர்வகிப்பதற்கு, ஆண்டுதோறும், 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது. காகிதமில்லா அரசு அலுவலகங்கள், சட்டசபையை நடத்த ஆர்வம் காட்டும் முதல்வர், இதையும் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.