ADDED : செப் 17, 2024 05:44 AM

சரக்கு பெட்டக முனைய திறப்பு விழாவில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:
வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், துாத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு பெட்டக முனையம் திறப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.
இந்த முனையம், இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரமாகும். 14 மீட்டருக்கும் அதிகமான ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த முனையம், வ.உ.சி., துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் தமிழக கடலோரப் பகுதிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் 17 சிறு துறைமுகங்களுடன், கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய மையமாக தமிழகம் மாறியுள்ளது.
துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க, வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்தை உருவாக்க, 7,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதால், வ.உ.சி., துறைமுகத்தின் திறன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி., துறைமுகம் தயாராக உள்ளது. இந்த துறைமுகம் ஒரு பசுமை ஹைட்ரஜன் மையமாகவும், கடல் காற்றாலை மின்சக்திக்கான நோடல் துறைமுகமாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த முனைய திறப்பு, கூட்டு வலிமைக்கு ஒரு சான்றாகும்.
உலகளாவிய வினியோக சங்கிலியில் இந்தியா ஒரு முக்கிய பங்குதாரராக மாறி வருகிறது, இந்த வளர்ந்து வரும் திறன், நம் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகும்.
இந்த உத்வேகம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும். இந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.