புதுமை திட்டங்களால் நகரமயமாக்கலில் தமிழகம் முன்னணி: அரசு பெருமிதம்
புதுமை திட்டங்களால் நகரமயமாக்கலில் தமிழகம் முன்னணி: அரசு பெருமிதம்
ADDED : ஜூலை 11, 2024 05:44 AM

சென்னை : 'நகராட்சி நிர்வாகத் துறை பணிகளால், நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு செய்திக்குறிப்பு:
இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை, 1991ல் 25.71 சதவீதம் என இருந்தது. கடந்த 2001ல், 31.16 சதவீதமாக உயர்ந்தது. அதேநேரம் தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை, 2011ம் ஆண்டில் 48.45 சதவீதமாக உயர்ந்து, நகரமயமாதலில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இதன் காரணமாக, ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் வளர்ச்சி பெறுகின்றன. நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, ஆண்டுதோறும் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலுார், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, ஈரோடு என, 11 மாநகராட்சிகளில், சீர்மிகு நகரத் திட்டம் 10,890 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி தவிர, மீதமுள்ள 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகளில், 11,872 கி.மீ., நீளமுள்ள சேதமடைந்த சாலைகளை, நான்கு ஆண்டுகளில் சீரமைக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற பசுமையாக்கம்
நகர்ப்புற உள்ளாட்சிகளில், பல ஆண்டுகளாக குவிந்திருந்த திடக்கழிவுகள், 'பயோமைனிங்' முறையில் அற்றப்படுகின்றன. அந்த நிலங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த, மரங்கள் நடப்படுகின்றன. இதுவரை, 41 உள்ளாட்சி அமைப்புகளில் மீட்கப்பட்டுள்ள, 127.84 ஏக்கர் நிலத்தில், 1.66 கோடி ரூபாய் மதிப்பில், நாவல், நெல்லி, கொடுக்காப்புளி, பாதாம், வேம்பு, புளியமரம், புங்கன்மரம் என, 57,505 மரங்கள் நட அனுமதிக்கப்பட்டு உள்ளன; இதுவரை 56,958 மரங்கள் நடப்பட்டு, சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகின்றன.
விருதுகள்
துாய்மை கணக்கெடுப்பு மாநில தரவரிசைப் பட்டியலில், தமிழகம் 22ம் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுக்கான தர வரிசை பட்டியலில், 10ம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் தரவரிசையில், திருச்சி மாநகராட்சி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
ஒரு லட்சத்திற்கும் குறைவான நகரங்களின் தரவரிசை பட்டியலில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. தெற்கு மண்டலத்தை சார்ந்த மாநிலங்களில் உள்ள நகரங்களில், 15,000க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட, நகரங்களின் தரவரிசை பட்டியலில், கீழ்வேலுார் பேரூராட்சி முதலிடம் பிடித்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில், புதுமையான திட்டங்களால், பல்வேறு பெருமைகளை பெற்று, நகராட்சி நிர்வாகத் துறையின் பணிகளால், நகரமயமாக்கலில் தமிழகம் இந்தியாவிலே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.