ADDED : மார் 10, 2025 05:36 AM
கோட்டயம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஷிபிலி மற்றும் பைசி ஆகியோரின் வாகனங்களை சோதனை செய்தனர். அதில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஒரு துப்பாக்கி இருந்தது.
அவற்றை கைப்பற்றிய போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கேரளாவில் இயங்கும் சட்டவிரோத குவாரிகளுக்கு வெடிபொருட்களை விநியோகிப்பதாகவும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சுரேந்திரன் முத்தையா, 52, என்பவர் வெடிபொருட்களை சப்ளை செய்வதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து வாழூர் காப்புக்காடு பகுதியில் சுரேந்திரன் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டை போலீசார் நேற்று சோதனையிட்டனர்.
அங்கிருந்து பாறைகளை வெடிவைத்து தகர்க்க பயன்படும் 75 மின்சார டெட்டனேட்டர்கள் மற்றும் பல அடி நீள ஒயர்கள் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோதமாக இவற்றை பதுக்கி வைத்திருந்த சுரேந்திரனையும் கைது செய்தனர்.