போதைப்பொருள் கேந்திரமாக மாறிய தமிழக சிறைகள்: பழனிசாமி
போதைப்பொருள் கேந்திரமாக மாறிய தமிழக சிறைகள்: பழனிசாமி
ADDED : ஜூலை 03, 2024 11:47 PM
சென்னை:'சிறைச்சாலையே போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக பயன்படுத்தப்பட்டு இருப்பதை, சமூக பொறுப்புள்ள எவராலும் ஏற்க முடியாது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் காவல் துறை, ஏவல் துறையாக மாறி விட்டது. தவறிழைக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதும், அவர்கள் ஆதரவு பெற்ற குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதில், உளவுத்துறை, சட்டம் - ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவுகள் ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளன. அவற்றுடன் தற்போது சிறைத்துறையும் இணைந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.
மெத்தாம்பெட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம், தன் மனைவியுடன் சேர்ந்து, செங்குன்றத்தில் 'மெத்' சரக்குக்கான 'பிக்கப் பாயின்ட்' அமைத்துள்ளார். போதைப்பொருள் விற்பனை குறித்து, சிறையில் இருந்தபடி தன் மனைவியிடம், 'வீடியோ காலில்' பேசி உள்ளார். இதை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கண்டறிந்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
சென்னையில் மிக முக்கியமான புழல் சிறையில், உயர் அந்தஸ்தில் பல அதிகாரி இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சி அளிக்கிறது. சிறைத்துறையும், காவல் துறையும், இனியாவது விழித்துக் கொண்டு, மூலக் குற்றவாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அடிக்கடி சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க., திராவிட மாடல் முதல்வர், இதுகுறித்து என்ன பதில் சொல்லப் போகிறார்?
போதைப்பொருள் கடத்தலுக்கு, துறைமுகங்கள், 'கூரியர் சர்வீஸ்' போன்றவற்றை பயன்படுத்தி வந்த கடத்தல் பெரும்புள்ளிகள், உச்சகட்டமாக சிறைச்சாலையை போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக பயன்படுத்தி உள்ளதை, சமூக பொறுப்புள்ள எவராலும் ஏற்க முடியாது.
இந்த பிரச்னையில், உண்மையான அக்கறையுடன் மத்திய அரசு தலையிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.