ADDED : ஆக 30, 2024 11:04 PM
சென்னை:ஹிந்தி பிரசார சபா வாயிலாக, ஹிந்தி பாட தேர்வுகளை எழுதியதில், தென் மாநிலங்களிலேயே, தமிழகம் முன்னிலையில் உள்ளது.
மத்திய அரசு, ஹிந்தியை அலுவல் மொழியாகவும், ஆங்கிலத்தை கூடுதல் அலுவல் மொழியாகவும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், குழந்தை பருவத்தில் இருந்தே ஹிந்தி மொழியை கற்பிக்கும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், தமிழகம், ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதுடன், இரு மொழி கொள்கையையும் கடைப்பிடிப்பதால், புதிய தேசிய கல்வி திட்டத்தை ஏற்கவில்லை. இதனால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி, மத்திய அரசு வழங்க வேண்டிய தமிழகத்துக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், சென்னையில் உள்ள தக் ஷின் பாரத் - ஹிந்தி பிரசார சபா சார்பில், இந்தாண்டு, பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில், எட்டு ஹிந்தி பாடங்களுக்கு நடந்த தேர்வுகளில், சென்னையில் இருந்து 1 லட்சத்து, 16,611 பேர் உட்பட, தமிழகம் முழுதும், 3 லட்சத்து, 54,655 பேர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல, ஆந்திராவில், 1 லட்சத்து, 4,959 பேரும், கர்நாடகாவில், 5,584 பேரும், கேரளாவில், 8,452 பேரும் தேர்வெழுதி உள்ளனர். இதில், தென் மாநிலங்களிலேயே அதிக மாணவர்கள் ஹிந்தி பாட தேர்வெழுதிய மாநிலமாக, தமிழகம் உள்ளது.
இதன் வாயிலாக, தமிழக மாணவர்களிடம் ஹிந்தி படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதை அறிய முடிகிறது.