ரயில் நிலையங்களில் 'நாப்கின் மிஷின்' தமிழச்சி கோரிக்கை
ரயில் நிலையங்களில் 'நாப்கின் மிஷின்' தமிழச்சி கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 02:15 AM

சென்னை:'அனைத்து ரயில் நிலையங்களிலும், பெண்களின் அவசரத் தேவைக்காக, 'சானிட்டரி நாப்கின்'களை பெறும் வகையில், தானியங்கி இயந்திரங்களை நிறுவ வேண்டும்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தென் சென்னை எம்.பி., தமிழச்சி வலியுறுத்தி உள்ளார்.
தென்சென்னை எம்.பி., தமிழச்சி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, நேற்று டில்லியில் சந்தித்தார். அப்போது, 'அனைத்து ரயில் நிலைய கடைகளிலும், பெண் பயணியரின் அவசரத் தேவைக்காக, சானிட்டரி நாப்கின் வைத்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை நிறுவ வேண்டும்.
சென்னையில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், 'அம்ரித் பாரத்' திட்டத்தை செயல்படுத்தி நடைமேடை விரிவாக்கம், நகரும் படிக்கட்டுகள், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், நவீன வசதிகளுடன் பயணச்சீட்டு வழங்குமிடம் ஆகிய வசதிகளை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினார்.