பஸ் நிலையம் அருகே 'டாஸ்மாக்' எதிர்ப்பு தெரிவித்தோருக்கு 'காப்பு'
பஸ் நிலையம் அருகே 'டாஸ்மாக்' எதிர்ப்பு தெரிவித்தோருக்கு 'காப்பு'
ADDED : செப் 12, 2024 11:32 PM

சென்னை:சென்னை மந்தைவெளி பஸ் நிலையம் அருகே, வெங்கட் கிருஷ்ணா சாலையில், 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, ஆளுங்கட்சியின், 'ஆசி'யுடன் புதிதாக, 'டாஸ்மாக்' கடை திறக்கப்பட்டது.
மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, ஆளும் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், சென்னையில் பஸ் நிலையம் அருகே, புதிதாக டாஸ்மாக் கடை துவக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தினத்தில் இருந்து, அப்பகுதிவாசிகள், 'டாஸ்மாக்' கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, அப்பகுதிவாசிகளுடன் இணைந்து, தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலர் சிவா தலைமையில், 'டாஸ்மாக்' கடையை அகற்றக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்பவ இடத்திற்கு வந்த அபிராமபுரம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:
கடந்தாண்டு ஏப்ரல், 12ம் தேதி, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகளில், 500 கடைகள் கண்டறியப்பட்டு படிப்படியாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மக்கள் விரோத செயலாக, புதுக்கடைகள் திறப்பது தொடர்கதையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.