டீக்கடை பெஞ்ச்: தேர்தல் விதிமீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
டீக்கடை பெஞ்ச்: தேர்தல் விதிமீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
ADDED : ஏப் 04, 2024 12:26 AM

''அந்த பெயர்ல யாரும் இல்லாம, முயற்சியை கைவிட்டுட்டாங்களாம் பா...'' என, நாளிதழை மடித்தபடியே விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''என்ன விஷயம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''திருச்சியில், தி.மு.க., கூட்டணி சார்புல, ம.தி.மு.க.,வின் துரை வைகோ போட்டியிடுறாரே... சமீபத்துல நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்துல, கூட்டணி கட்சியான மாநகர காங்., துணை தலைவர் ராஜா நசீர் பேசினாரு பா...
''அப்ப, 'துரை வைகோ சுயேச்சைசின்னத்துல போட்டியிடுறதால, ராமநாத புரத்துல அஞ்சு பன்னீசெல்வங்களை நிறுத்திய மாதிரி, இங்கயும் துரை வைகோ பெயர்ல நாலஞ்சு பேரை நிறுத்தி குழப்பம் ஏற்படுத்த அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டாங்க...
''ஆனா, அந்த பெயர்ல யாருமே அவங்களுக்கு சிக்கலை... இதனால, அந்த முயற்சியை அ.தி.மு.க.,வினர் கைவிட்டுட்டாங்க... அந்த அளவுக்கு யாருடனும் ஒப்பிட முடியாத பெயர் உங்களுக்கு அமைஞ்சிருக்கிறதே வெற்றிக்கு முன்னோட்டம் தான்'னு அடிச்சு விட்டாரு... இதைக் கேட்டு, துரை வைகோவே ஒரு நிமிஷம், 'ஜெர்க்' ஆகிட்டாருப்பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரிகள் மேல விசாரணை நடக்கும்னு சொல்றா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சமீபத்துல, சென்னையில் சில கட்டுமான நிறுவனங்கள்ல அமலாக்கத் துறை, 'ரெய்டு' நடந்துச்சோல்லியோ... இதுல, கட்டட அனுமதி வழங்கற இடங்கள்ல இருக்கிற முக்கிய அதிகாரிகளுக்கு பெரும் தொகை கொடுத்தது சம்பந்தமான ஆதாரங்கள் கிடைச்சிருக்காம் ஓய்...
''அந்த அதிகாரிகளிடம் சீக்கிரமே விசாரணை நடக்கும்னு சொல்றா... ஆனா, இப்ப நடக்குமா அல்லது தேர்தல் பரபரப்புகள் முடிஞ்சதும் நடக்குமான்னு தான் தெரியல ஓய்...
''அதே நேரம், இதுல உண்மை இல்லைன்னும் ஒரு குரூப் சொல்றது... அதாவது, கட்டடங்களுக்கு அனுமதி வழங்கற முக்கிய பதவிகளை பிடிக்க துடிக்கற அதிகாரிகள் சிலர் தான் இப்படி கிளப்பி விடறான்னும் ஒரு, 'டாக்' ஓடறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தேர்தல் விதிகளை அப்பட்டமா மீறுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''அப்படின்னா, ஆளுங்கட்சியினரா தான் இருப்பாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆமா... காஞ்சிபுரம் மாவட்டத்துல காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சா தொகுதிகள் அடங்கியிருக்கு... தேர்தல் தேதி அறிவிச்சதுல இருந்தே, காஞ்சிபுரத்துல இருக்கிற பல சட்டசபை தொகுதிகள்லயும் விதிமீறல்கள் நிறைய நடக்கு வே...
''வேட்புமனு தாக்கல் நடந்தப்ப, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்துக்குள்ள அதிரடியா புகுந்துட்டாவ... அதுவும் இல்லாம, அனுமதி பெறாத வாகனங்களை பிரசாரங்கள்ல பயன்படுத்துதாவ வே...
''பிரசாரத்துல, சரமாரியா பட்டாசுகள் வெடிக்கிறதுன்னு ஏகப்பட்ட விதிமீறல்கள் நடக்கு... ஆனா, எல்லாத்தையும் அதிகாரிகள் வேடிக்கை தான் பார்க்காவளே தவிர, வழக்கு எதுவும் பதிவு பண்ண மாட்டேங்காவ வே...
''ஆளுங்கட்சியினரை பார்த்து பயப்படுறதால தான், எந்த வழக்கும் போடாம அமைதியா இருக்காவன்னு எதிர்க்கட்சியினர் புலம்புதாவ... இந்த மாவட்டத்துல, இதுவரை ஒரு தேர்தல் விதிமீறல் வழக்கு கூட பதிவாகலன்னா பார்த்துக்கிடுங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

