ADDED : மே 04, 2024 10:17 PM
சென்னை:தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம், அதன் தலைவர் மணிமேகலை தலைமையில், சென்னையில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும், 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு, அரசாணையின்படி இலவச சிகிச்சை வழங்க வேண்டும்.
ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான முழு தொகையையும் வழங்குவதிவில்லை; 30 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வழங்குகின்றன.
எனவே, முறைகேடுகள் செய்யும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட கருவூல அலுவலகங்கள் முன், ஜூன் 13ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இரண்டாம் கட்டமாக, சென்னையில், ஜூலை 17ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.