கோவிலில் மாற்று மதத்தினர் திருமணத்திற்கு அனுமதி மறுப்பு
கோவிலில் மாற்று மதத்தினர் திருமணத்திற்கு அனுமதி மறுப்பு
ADDED : மார் 05, 2025 08:43 PM
சென்னை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாற்று மதத்தினர் திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை, பாரத் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் பிரபு வரவேற்றுள்ளார்.
அவரது அறிக்கை:
ஹிந்து கோவில்களில், திருமணம் செய்ய வேண்டுமானால், மணமக்கள் இருவரும் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்பது விதி. சமீபத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருமணம் செய்ய வந்த, மணமக்களின் ஆவணங்களை சரி பார்த்தபோது, மணமகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. எனவே, அங்கு திருமணத்தை நடத்த, கோவில் இணை கமிஷனர் அனுமதி மறுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.
ஆனால், ஜாதி அடிப்படையில் திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக, கோவில் இணை கமிஷனர் மீது, திருவண்ணாமலை எஸ்.பி.,யிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளனர். கோவிலுக்கு சென்று இணை கமிஷனரை மிரட்டியும் உள்ளனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. உரிய விசாரணை நடத்தி, கடமையை செய்த இணை கமிஷனரை மிரட்டியவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.