தீ விபத்தில் சிக்கிய கோவில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்!
தீ விபத்தில் சிக்கிய கோவில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்!
UPDATED : செப் 13, 2024 07:37 AM
ADDED : செப் 13, 2024 07:23 AM

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவில் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்த யானை சுப்புலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுப்புலட்சுமி என்ற யானை உள்ளது. கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டின் அருகிலேயே யானை மண்டபம் உள்ளது. யானை மண்டபத்தில் மேற்கூரையான தகர சீட்டில், வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கீற்று கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக, கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயில் இருந்து தப்பிக்க, சுப்புலட்சுமி யானை தாமாகவே மண்டபத்திலிருந்து வெளியேறி வந்தது. கோயில் மண்டபத்தில் முன்பு தீக்காயத்துடன் யானை நிற்பதை பார்த்த, மக்கள் மற்றும் பணியாளர்கள் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த கால்நடை மருத்துவர்கள், யானை சுப்புலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி யானை சுப்புலட்சுமி உயிரிழந்தது.
இதைத் தொடர்ந்து, மறைந்த யானை சுப்புலட்சுமிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கோயில் நிர்வாகிகளும், பக்தர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தீவிபத்தில் சிக்கி கோவில் யானை உயிரிழந்த சம்பவம் பக்தர்களையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.