கோயில் சொத்து பராமரிப்பு: சி.பி.ஐ., விசாரணை ரத்து
கோயில் சொத்து பராமரிப்பு: சி.பி.ஐ., விசாரணை ரத்து
ADDED : ஏப் 07, 2024 01:44 AM

சென்னை: கோவில் சொத்துக்கள் பராமரிப்பு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய பதிவுத்துறை மறுத்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, குறிப்பிட்ட அந்த நிலம், நந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சொந்தமானதா என்ற கேள்வி எழுந்தது.
நிலம் தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ''கோவில் நிலம் தொடர்பான அசல் ஆவணங்களை, அதிகாரிகளால் தாக்கல் செய்ய முடியவில்லை. கோவில் சொத்து குறித்த பதிவேட்டையும், சொத்தையும் பராமரிப்பதில், அறநிலையத்துறை சட்டத்தை அதிகாரிகள் பின்பற்றவில்லை.
எனவே, இந்தக் கோவில் சொத்துக்கள் குறித்தும், அதை முறையாக பராமரிக்காமல் தவறு செய்த அதிகாரிகள் குறித்தும், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, கோதண்டராமர் கோவில் நிர்வாக அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
நிர்வாக அதிகாரி சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களை கவனமுடன் அதிகாரிகள் பாதுகாப்பர்,'' என்றார்.
இதையடுத்து, ''தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும், கோவில் சொத்துக்களை கவனித்துக் கொள்வதாக உத்தரவாதம் அளித்ததாலும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்படுகிறது,'' என, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

