ADDED : செப் 15, 2024 12:29 AM
சென்னை:அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது:
தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில், 2019ல், 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில், 249; 248; 131; 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தாண்டில் இதுவரை, 72 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
அதேபோல, சென்னையில், 2019ம் ஆண்டில், 55 வழக்குகள்; அடுத்தடுத்த ஆண்டுகளில், 49; 27; 26; 18 வழக்குகள் பதிவு செய்த நிலையில், இந்தாண்டில் இதுவரை நான்கு வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
எங்கள் இயக்கம் சார்பில், கல் குவாரி ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், கரூரில் போடப்படாத ரோட்டிற்கு பணம் பெற்றதில் ஊழல் என, 30க்கும் மேற்பட்ட புகார்களை ஆதாரத்துடன் அளித்துள்ளோம். லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த புகார்களை விசாரிக்காமல் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக எவ்வித வழக்கும் பதியாமல் துாங்கும், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரை, தட்டி எழுப்பும் வகையில், இன்று முதல் காபி துாள் அனுப்பும் போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.