கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட காவிரி நீர் 5ம் நாளாக கடலில் கலந்து வீணாகியது
கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட காவிரி நீர் 5ம் நாளாக கடலில் கலந்து வீணாகியது
UPDATED : ஆக 08, 2024 11:38 AM
ADDED : ஆக 07, 2024 06:17 AM

மயிலாடுதுறை : கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீர் 5ம் நாளாக வீணாக கடலில் கலப்பது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகள் நிரம்பியதால் திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. அணை நிரம்பியதால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக கொள்ளிடத்தில் ஆக.,2ம் தேதி காலை 5:00 மணிக்கு வினாடிக்கு 74 ஆயிரத்து 225 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு இரவு 8:00 மணிக்கு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 954 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 3ம் தேதி ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 400 கன அடியும், 4ம் தேதி ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 73 கன அடி நீர் திறக்கப்பட்டது.
5 நாட்களாக தண்ணீரை சேமிக்க வழியின்றி, வாய்க்கால் வழியே திருப்பி விட்டு மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் வீணாக கடலில் கலக்கிறது. குறுவை சாகுபடிக்கு தண்ணீரை எதிர்நோக்கி காத்திருந்த விவசாயிகளுக்கு பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலப்பது வேதனையை அளித்துள்ளது.
முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், அதை அரசு செவி மடுக்காததால் வருண பகவான் வரமாக அளித்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இனிவரும் காலங்களிலாவது தண்ணீரை வீணடிக்காமல் குடிநீர், விவசாயத்திற்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு ரூ.463 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குமாரமங்கலம் கதவணை பணியை விரைந்து முடித்து தண்ணீரை தேக்க வேண்டும். மேலும் கொள்ளிடம் ஆற்றில் 5 கி.மீ., துாரத்திற்கு ஒரு கதவணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும்.