மத்திய அரசு சொன்னது 17,000 டன் தமிழகம் வாங்கியதோ 1,800 டன் கேழ்வரகு கொள்முதலில் வாணிப கழகம் 'பெயில்'
மத்திய அரசு சொன்னது 17,000 டன் தமிழகம் வாங்கியதோ 1,800 டன் கேழ்வரகு கொள்முதலில் வாணிப கழகம் 'பெயில்'
ADDED : ஆக 05, 2024 01:53 AM

சென்னை:மத்திய அரசு, விவசாயிகளிடம் இருந்து 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய வழங்கிய அவகாசம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் இதுவரை, 1,800 டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது.
பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, ரேஷன் கடைகளில் கேழ்வரகை இலவசமாக வழங்க உள்ளது தமிழக அரசு. முதல் கட்டமாக, நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கார்டுதாரருக்கு தலா, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக, இந்திய உணவு கழகத்திடம் இருந்து வாங்கப்படுகிறது.
உத்தரவாதம்
மத்திய அரசு, ராணுவ வீரர்களுக்கான உணவு உட்பட பல்வேறு ஊட்டச்சத்து திட்டங்களில் சிறுதானியங்களை சேர்த்துள்ளது. இதற்காக தமிழகவிவசாயிகளிடம் இருந்து, 17,000 டன் கேழ்வரகுகொள்முதல் செய்து தரும் பணியை, நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைத்தது.
விவசாயிகளுக்கு 100 கிலோ கேழ்வரகுக்கு, 3,846 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாகவழங்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்ய நேரடி நிலையங்கள துவக்கப்பட்டன.
கடந்த 2023 டிசம்பரில் துவங்கி, இந்தாண்டு பிப்ரவரிக்குள் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதற்கு, கூடுதல் அவகாசம் அளிக்கக் கோரிய வாணிப கழகத்தின் கோரிக்கையை ஏற்று, இந்தாண்டு ஆகஸ்ட் வரை மத்திய அரசு அவகாசம் அளித்தது; அது, இம்மாதத்துடன் முடிவடைகிறது.
இதுவரை, 1,030 விவசாயிகளிடம் இருந்து, 1,800 டன் மட்டுமே கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கரில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. பிற மாநிலங்களில் பிஸ்கட், ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும் நிறுவனங்கள், தமிழக விவசாயிகளிடம் முன்கூட்டியே உத்தரவாதம் அளித்து வாங்கிக் கொள்கின்றன.
ஆர்வம்
முதல்முறையாக அரசு கேழ்வரகு கொள்முதல், கடந்த ஆண்டில் தான் துவங்கியது. அதற்கு முன்னதாகவே விவசாயிகள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி விட்டதால், 500 டன் கூட கிடைக்கவில்லை.
நடப்பு சீசனில் அரசு கொள்முதல் தொடர்பாக, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தனியாரை விட அரசு வழங்கும் விலை அதிகம்.
இருப்பினும், பல விவசாயிகள் தாங்கள் ஏற்கனவே உறுதி அளித்த நிறுவனங்களுக்கு கேழ்வரகு வழங்கி விட்டனர். ஆனாலும், அரசிடம் வழங்கவும் பலர் ஆர்வம் காட்டினர்.
அதனால் தான், இந்த சீசனில் 1,800 டன் கொள்முதல் செய்யப்பட்டது. இது, இனி வரும் சீசனில் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப, மற்ற மாவட்ட ரேஷன் கடைகளிலும் கேழ்வரகுவழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.